சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் அருகே போதைக்கு அடிமையான மகன், தனது தந்தையைக் கோடரியால் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, எவ்வித பதற்றமுமின்றி பிரியாணி சாப்பிட்டுவிட்டு உறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பஹேராபாரா பகுதியைச் சேர்ந்தவர் பாரஸ் கெர்கெட்டா (50). இவரது மகன் பிரபாத் கெர்கெட்டா (என்ற) லெதா. பிரபாத் தனது தந்தையின் வீட்டிற்கு அருகிலேயே தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், ஹோலி பண்டிகை அன்று இரவு 11 மணியளவில் பிரபாத் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
மகன் போதையில் இருப்பதைக் கண்ட தந்தை பாரஸ், அவரைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பிரபாத் வீட்டிலிருந்த கோடரியை எடுத்து தனது தந்தையின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாரஸ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
தந்தை உயிரிழந்ததை உறுதி செய்த பிரபாத், கொலையை மறைக்கத் திட்டமிட்டார். ரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டு, தந்தையின் உடலை வீட்டிற்கு அருகிலுள்ள சிறிய தண்ணீர் தொட்டியில் வீசினார். இந்தக் கொடூரச் செயலைச் செய்த பிறகும், எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி வெளியே சென்று பிரியாணி வாங்கிச் சாப்பிட்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து போர்வையைப் போர்த்திக்கொண்டு நிம்மதியாக உறங்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தண்ணீர் தொட்டியிலிருந்து பாரஸின் உடலை மீட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாத்தைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, ஆத்திரத்தில் தந்தையைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். “தந்தை திட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட பிரபாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் சிறு தகராறில் பெற்ற தந்தையையே மகன் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
