மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஐரோப்பா வரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரைன், இஸ்ரேலுக்கு ட்ரோன் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரானுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு, ஈரானின் இந்த நேரடி மிரட்டல் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்த மிரட்டலை ‘வேடிக்கையானது’ என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. ரஷ்யாவுடனான போரில் ஈரானிய ட்ரோன்களை வீழ்த்திய அனுபவம் தங்களுக்கு இருப்பதாகவும், அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள பல நாடுகள் தங்களை அணுகுவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதேசமயம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எங்களிடம் உலகின் சிறந்த ட்ரோன்கள் இருப்பதாகவும், உக்ரைனின் உதவி தங்களுக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். ஈரானின் இந்த ஆக்ரோஷமான போக்கிற்குப் பின்னால் ரஷ்யாவின் தூண்டுதல் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
