மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 16 நாட்களாகக் கடுமையான போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அவருக்குப் பின் அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ளன.

அமெரிக்கத் தளங்கள் குறித்த ரகசியத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாகவும், சீனா நிதி மற்றும் இராணுவத் தளவாட உதவிகளை அளிப்பதாகக் கூறியுள்ளதும் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தைவான் நாட்டை ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தைவானைச் சுற்றி சீனா தனது போர்க்கப்பல்களையும் விமானங்களையும் குவித்து வருவதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தற்போது ஈரான் போரில் பிஸியாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு சீனா தைவானைத் தாக்கினால், அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் போரிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும். இது உலக அரசியலில் மற்றொரு பெரிய போருக்கான அச்சத்தை உருவாக்கியுள்ளது.