அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சீனப் பயணத்திற்குப் பிறகு வெளியிட்ட ஒரு அறிக்கை, சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் தீவு சீனாவிற்கு மிக அருகில் இருக்கும் வேளையில், 9,500 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பகுதிக்காக அமெரிக்கா மற்றொரு போரில் ஈடுபட விரும்பாது என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், தைவானுடன் திட்டமிடப்பட்டிருந்த 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் குறித்தும் மறுபரிசீலனை செய்து வருவதாகக் குறிப்பிட்டார். ட்ரம்பின் இந்த கருத்து, சீனாவின் அழுத்தத்திற்குப் பணிந்து அமெரிக்கா தைவானைக் கைவிட முயல்வதைக் காட்டுவதாக அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.

இதற்கு மிகக் கடுமையான மற்றும் நேரடியான பதிலடியை தைவான் கொடுத்துள்ளது. தைவானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தைவான் ஒரு இறையாண்மையுள்ள, சுதந்திரமான ஜனநாயக நாடு என்றும், அது ஒருபோதும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் ராணுவ உதவி மிகவும் இன்றியமையாதது என்பதையும் தைவான் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம், சீனாவின் மிரட்டல்களுக்குப் பணியப் போவதில்லை என்பதை நிரூபித்த தைவான், தன்னை ஒரு பேச்சுவார்த்தைக்கான கருவியாகப் பயன்படுத்த நினைத்த அமெரிக்காவிற்கும் தனது பலத்தை உணர்த்தியுள்ளது.