அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், “நீங்கள் தவெகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனல் பறக்கக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், எஸ்பி.வேலுமணி மற்றும் அவரது அணியில் இருந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தது குறித்தும், மற்றொரு புறம் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணைந்தது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்குப் பிறகு விரிவாகப் பதிலளிப்பதாகக் கூறிய அவரிடம், தங்களது அணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 25-லிருந்து 17 ஆகக் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டபோது, “25 என்ற எண்ணிக்கை 35 ஆகக் கூட மாறலாம், அதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது” என்று சவாலாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தவெகவில் இணைவது குறித்த கேள்விக்குக் கடுமையான கோபத்துடன் மறுப்பு தெரிவித்துவிட்டு அவர் காரில் புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
