எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் உள்ள வடக்கு ஷேவா மண்டலத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா பகுதியில் அமைந்த அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் நடந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத விழாவிற்காக புதன்கிழமை கூடியிருந்த பக்தர்கள் நிற்க தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காவல்துறையினரின் தகவலின்படி, இடிபாடுகளுக்குள் சிக்கிய பலர் நசுங்கி உயிரிழந்துள்ளனர். சாரத்தின் ஓரங்களில் இருந்த சிலர் வெளியே ஓடி உயிர்தப்பியிருந்தாலும், அவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் எத்தியோப்பியா முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.