திருப்பத்தூர் அருகே கந்திலி பகுதியில்  தேர்வு எழுதச் சென்ற கல்லூரி மாணவி டிப்பர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி.கே. ஆசிரமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர், ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த தனது தோழி ரம்யா மற்றும் ஜெய்பீம் நகரைச் சேர்ந்த பிரியங்கா ஆகியோரை ஒரே இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்குச் சென்றுள்ளார்.

அப்போது கந்திலி அருகே முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் லேசாக மோதியதில் நிலைதடுமாறி மூவரும் லாரியின் முன் விழுந்தனர். இதில் மாணவி ரம்யாவின் தலையின் மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சக்திவேல் மற்றும் பிரியங்காவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு எழுதச் சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி மாணவி உயிரிழந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.