சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் சூழல் குறித்துக் காரசாரமாகப் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணைத் தொட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் சராசரியாக ரூ.16 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு குடும்பம் சுமார் ரூ.10 லட்சம் வரை கூடுதலாகச் செலவு செய்துள்ளது எனப் பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.

கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை அவர் தெளிவாக விளக்கினார்:
யாரிடமும் மடிப்பிச்சை கேட்க மாட்டோம்: “கூட்டணிக்காக அ.தி.மு.க. யார் வீட்டுக் கதவையும் தட்டாது. நாங்கள் மிகவும் பலமாக இருக்கிறோம். யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை.”

படி.டி.வி.தினகரனின் வருகை அ.தி.மு.க.வுக்கு கூடுதல் பலத்தைத் தந்துள்ளது. பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெறும். புதிய கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம், இல்லையெனில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும்.

தே.மு.தி.க.வுடன் தற்போது வரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். அதன்பிறகு தி.மு.க.வுக்குப் போட்டி த.வெ.க. (விஜய் கட்சி) என்று கூறுபவர்களுக்குத் தேர்தல் முடிவு உண்மையை உணர்த்தும். அ.தி.மு.க.வே தமிழ்நாட்டின் பலமான கட்சி.
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும், கரூரில் நடந்த கூட்டநெரிசலையும் செங்கோட்டையன் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது நகைப்புக்குரியது எனத் தெரிவித்தார்.