கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பயங்கர பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் எதிர்பாராத விதமாக கலைந்து வந்த தேனீக்கள் கூட்டம், அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவ, மாணவிகளைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கின. இதனால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தத் தேனீக்கள் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடலின் பல்வேறு இடங்களில் தேனீக்கள் கொட்டியதால் படுகாயமடைந்து அலறித் துடித்தனர்.

​காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, முதலுதவிக்காக மங்களூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மேல்சிகிச்சைக்காக அவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளி வளாகத்திற்குள் தேனீக்கள் புகுந்து மாணவ, மாணவிகளைக் கொடூரமாகக் கொட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.