திரையரங்கில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க மறுத்த ஒருவரை, அங்கு இருந்த சிலர் கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

X  தளத்தில் முதலில் வெளியான இந்த வீடியோ, Reddit, Instagram உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. “நாட்டின் இளைஞர்கள் நாளுக்கு நாள் #துரந்தர்களாக மாறி வருகின்றனர்” என்ற தலைப்புடன் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

அந்தக் காணொளியில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது அமர்ந்திருந்த ஒருவரை திரையரங்கில் இருந்த சிலர் கூச்சலிட்டு எழுந்து நிற்க வற்புறுத்துவதும், பின்னர் அவரை வெளியேறும் வழியை நோக்கித் தள்ளிச் செலுத்துவதும் பதிவாகியுள்ளது. இறுதியில், கைதட்டலும் கோஷங்களும் எழ, அந்த நபர் திரையரங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் நடைபெற்ற திரையரங்கின் இடம் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ உறுதிப்பாடு எதுவும் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவத்தை ஆதரித்து சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பது மரியாதையின் அடிப்படை அடையாளம் என்றும், உடல்நலக் குறைபாடு அல்லது மருத்துவ காரணங்கள் இல்லாவிட்டால் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிலர், சம்பந்தப்பட்ட கூட்டத்தை “தேசபக்தர்கள்” எனப் பாராட்டியதுடன், இத்தகைய நடவடிக்கைகள் இளைய தலைமுறையினருக்கு ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் கற்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தரப்பினர், இந்தச் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தேசபக்தி இதயத்திலிருந்து வர வேண்டியது; அதை வற்புறுத்த முடியாது என்றும், கூச்சலிடுதல் அல்லது தள்ளுதல் மூலம் தேசபக்தியை திணிப்பது தவறானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் சிலர் இந்தச் சம்பவத்தை “அதீத தேசியவாதம் (ஜிங்கோயிசம்)” என வர்ணித்துள்ளனர்.

மேலும், திரையரங்குகள் பொழுதுபோக்குக்கான இடங்கள் என்பதால், வன்முறை அல்லது வயது வந்தோருக்கான காட்சிகள் கொண்ட திரைப்படங்களுக்கு முன் தேசிய கீதம் இசைப்பதன் பொருத்தம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.