அவசரமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் உயிருக்கு மட்டுமல்ல, சாலையில் பயணிக்கும் பிறரின் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில், சாலையில் பைக் ஓட்டும் போது ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் பைக் ஓட்டிக்கொண்டே ஒரு கையை விட்டுவிட்டு, அருகில் செல்லும் வாகனங்களை நோக்கி பைக்கை சாய்த்தும் உதைத்தும் ஓட்டுகிறார். பின்னர் திடீரென வேகத்தை அதிகரித்து, பைக்கை காற்றில் புரட்டும் வகையில் ஸ்டண்ட் செய்கிறார்.
பயங்கரமான இந்த காட்சியில், அந்த நபர் தனது கால்கள் மற்றும் உடல் அசைவுகளை மட்டுமே பயன்படுத்தி பைக்கை கட்டுப்படுத்துவது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. பலமுறை அவர் சமநிலையை இழந்து விழுவார் போலத் தோன்றினாலும், இறுதி வரை சமநிலையைத் தக்கவைத்துக் கொள்கிறார். இதனால் பார்வையாளர்கள் பதற்றத்துடன் வீடியோவைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
i watched the whole 1 minute video hoping for him to fall 😩pic.twitter.com/uPlWNHDsLr
— Peché Africa 🇿🇦 (@pmcafrica) December 12, 2025
இந்த வீடியோ சமூக ஊடக தளமான X இல் @pmcafrica என்ற கணக்கில், “அவர் விழுந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் முழு ஒரு நிமிட வீடியோவையும் பார்த்தேன்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் 15 வினாடிகள் கொண்ட இந்த காணொளி இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் லைக் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவைப் பார்த்த பலர், “இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம்”, “இது சாலை; ஸ்டண்ட் மைதானம் அல்ல” என கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒருவர், “அவரது ஒரு சிறிய தவறு கூட மற்றொருவரின் உயிரை பறித்திருக்கலாம்” எனக் கோபம் வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், சிலர் அந்த நபரின் பைக் கட்டுப்பாட்டு திறனைப் பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ, சாலைகளில் இத்தகைய ஆபத்தான செயல்கள் எவ்வளவு பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
