கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் பகுதியைச் சேர்ந்த ரிஷப் என்பவர், பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே கல்லூரியில் படித்ததால் ஏற்பட்ட அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, ரிஷப் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பு முடிந்த பின்னர், அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து ரிஷப்பிடம் அவர் தெரிவித்த நிலையில், கர்ப்பத்தை கலைக்குமாறு ரிஷப் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு, தன்னை திருமணம் செய்ய வேண்டும் என இளம்பெண் கூறியுள்ளார். ஆனால், கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே திருமணம் செய்வதாக ரிஷப் கூறியதாகவும், இதையடுத்து இளம்பெண் கர்ப்பத்தை கலைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர், ராய்ச்சூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ரிஷப், அந்த இளம்பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. பெற்றோரின் சம்மதம் பெற்ற பின் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறிய ரிஷப், இளம்பெண்ணை அவரது வீட்டிலேயே இருக்கச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், கடந்த சில மாதங்களாக ரிஷப், காதல் மனைவியுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்தியதாகவும், அவரை தொடர்பு கொள்ளவும் முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ரிஷப்புக்கும் மற்றொரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பது குறித்து அந்த இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது. தனது திருமணம் தொடர்பான அழைப்பிதழை ரிஷப், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததை பார்த்து, அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, கொப்பலிலிருந்து ராய்ச்சூருக்கு சென்ற அந்த இளம்பெண், ராய்ச்சூர் டவுனில் உள்ள திருமண மண்டபத்திற்கு நேரில் சென்று, வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்கத் தயாராக இருந்த ரிஷப்பிடம் தகராறில் ஈடுபட்டார். தன்னை காதலித்து, கோவிலில் வைத்து திருமணம் செய்ததும், கர்ப்பத்தை கலைக்க வைத்ததும் குறித்து அவர் பொதுமக்கள் முன்னிலையில் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கேட்டு, திருமண மண்டபத்தில் இருந்த பெண் வீட்டார் மற்றும் ரிஷப் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரிஷப்புக்கு நடைபெற இருந்த 2-வது திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, ராய்ச்சூர் மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ரிஷப் மீது புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரிஷப் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.