ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்புரா பஜாரில் செயல்படும் நகைக்கடையில் வியாழக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த சம்பவம் பெரும் சோகத்தை தவிர்த்துள்ளது. ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியைச் சேர்ந்த நகை தொழிலதிபர் ராஜ்குமார் சோனி (60), கடையில் வணிக விவகாரங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கவுண்டரில் விழுந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தரையில் படுக்க வைத்தனர். இதனையடுத்து, நகைக்கடை உரிமையாளரின் மகன் வருண் ஜெயின் உடனடியாக சுமார் இரண்டரை நிமிடங்கள் தொடர்ந்து CPR (இதய-மூச்சு மீட்பு) செய்து, ராஜ்குமார் சோனியின் உயிரைக் காப்பாற்றினார். இந்த முழு சம்பவமும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, அதன் காட்சிகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.

இதுகுறித்து வர்த்மான் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் விமல் குமார் ஜெயின் கூறுகையில், “வணிக விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்த போது ராஜ்குமார் சோனி திடீரென பதற்றமடைந்து நாற்காலியிலிருந்து மயங்கி விழுந்தார். இதனால் கடை ஊழியர்கள் அனைவரும் பீதியடைந்தனர். ஆனால், வருண் ஜெயின் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உடனடியாக CPR அளித்தார்” என்றார்.

 

தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு ராஜ்குமார் சோனிக்கு சுயநினைவு திரும்பியதாகவும், பின்னர் அவருக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 11-ஆம் தேதி வணிக நோக்கில் கோட்டாவிற்கு வந்திருந்த ராஜ்குமார் சோனி, மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கோட்டாவிற்கு வருவதாக கூறப்படுகிறது. சுயநினைவு திரும்பிய பின்னர், திடீரென கடுமையான மார்பு வலி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு நடந்த சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட CPR நடவடிக்கையால் ஒரு மனித உயிர் காப்பாற்றப்பட்டதற்கான உதாரணமாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது.