அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று பல சாதனைகளைப் படைத்தது. அந்த அணியின் வெற்றிக்குப் பின்னால் பலரின் உழைப்பு இருந்தாலும், சஞ்சு சாம்சன் மற்றும் அவரது மனைவி சாருலதா ரமேஷ் இடையிலான பிணைப்பு தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த உலகக்கோப்பையில் தொடக்கத்தில் விளையாடும் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்பை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், 5 போட்டிகளில் விளையாடி 80.25 சராசரியுடனும், 199.37 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தம் 321 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்தார்.

2015-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சஞ்சு சாம்சன், கடந்த 10-12 ஆண்டுகளில் வெறும் 60 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். பல ஏமாற்றங்கள் மற்றும் சவால்களைக் கடந்தே அவர் இன்று இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ளார். இந்த நீண்ட நெடிய பயணத்தில், சஞ்சு சாம்சனுக்குத் தூணாக நின்றது அவரது மனைவி சாருலதா ரமேஷ் ஆவார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanju V Samson (@imsanjusamson)

திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியோஸ் கல்லூரியில் ஒன்றாகப் படித்த சஞ்சு மற்றும் சாருலதா, நட்பிலிருந்து காதலர்களாக மாறினர். 5 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, தனது மனைவிக்காக சஞ்சு சாம்சன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது,

“நாம் முதன்முதலில் சந்தித்த நாளிலிருந்து இன்று வரை, என் ஒவ்வொரு அடியிலும் உறுதுணையாக இருந்த உனக்கு நன்றி. உலகம் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும், என்னை அப்படியே ஏற்றுக்கொண்டவள் நீ. எனது வாழ்க்கையில் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை நீ உணர்ந்திருந்தாய். எனது உச்சங்களையும், தாழ்வுகளையும் பார்த்தவள் நீ. நான் இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று எந்த அளவுக்குத் தீர்க்கமாகப் போராடினேனோ, அதே அளவுக்கு என்னுடன் சேர்ந்து நீயும் பிரார்த்தனை செய்தாய். எனது அன்பிற்குரிய ‘பொண்டாட்டி’, உனக்கு மிக்க நன்றி,” என உணர்ச்சிகரமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் சஞ்சு சாம்சனின் இந்த நெகிழ்ச்சியான பதிவு, வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னால் இருக்கும் உறுதுணையான துணையின் முக்கியத்துவத்தை ரசிகர்களுக்குப் புரிய வைத்துள்ளது.