ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மற்றும் அவரது குடும்பத்தினர், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தற்போது பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ரஷீத் கானை நோக்கி விடுத்திருக்கும் கடும் விமர்சனமும், எச்சரிக்கையும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆப்கானிஸ்தான் மக்களை ‘நன்றி கெட்டவர்கள்’ என விமர்சித்துள்ளார். மேலும், “ஆப்கான் மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் அளிப்பவர்களுக்கு எதிராகவே விஷத்தைக் கக்குகிறார்கள். ரஷீத் கான் தற்போது பெஷாவரில் இருந்தால், அவர் உடனடியாக வேறொரு இடத்திற்குச் சென்று தஞ்சம் புகுவது நல்லது.

எங்களின் இரத்தத்தை உறிஞ்சியவர்கள் அனைவரும் இனி தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும். தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் தற்போது ‘சொர்க்கமாக’ மாறியிருக்கும் நிலையில், அவர்கள் அங்கேயே வசிக்கலாம்” என மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி, மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை காரணமாக, ரஷீத் கான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பிற்காக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள பெஷாவரில் அதிகப்படியான ஆப்கானிஸ்தான் மக்கள் வசிப்பதால், ரஷீத் கான் அங்கு தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் மிகச்சிறந்த டி20 பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ரஷீத் கான், இதுவரை 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அவர் 117 ஒருநாள் போட்டிகளில் 210 விக்கெட்டுகளையும், 115 டி20 போட்டிகளில் 193 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நிகழாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதைத் தொடர்ந்து, ரஷீத் கானிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, இப்ராஹிம் ஜத்ரானிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது பாகிஸ்தான் அமைச்சரின் இந்தத் தரக்குறைவான விமர்சனம், கிரிக்கெட் வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.