ஓபன் ஏஐ நிறுவனம் தனது கொள்கைகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து, ராணுவப் பயன்பாடுகளுக்காகத் தனது செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தொடக்கத்தில், மக்களைக் கண்காணிக்கவோ அல்லது ஆயுதங்களை இயக்கவோ ஏஐ-ஐப் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த நிறுவனம், தற்போது அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை, “திறந்தநிலை மற்றும் பாதுகாப்பான ஏஐ ” என்ற நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, போர்க்களங்களில் இலக்குகளைத் தீர்மானிக்கவும், உளவுத் தகவல்களைத் திரட்டவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தக் கொள்கை மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் பிரிவின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குப் பயனுள்ள வகையில் இருக்க வேண்டுமே தவிர, அழிவுப் பாதையில் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் பெரும் லாபத்தை எதிர்பார்க்கும் நிலையில், மறுபுறம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இது போன்ற “கொல்லும் இயந்திரங்கள்” மற்றும் கண்காணிப்பு முறைகள் மனித உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கின்றனர்.