அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த வர்த்தக வரி மிரட்டலுக்குப் பணிந்த தென்கொரியா, அந்நாட்டில் சுமார் ரூ.29 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி, தென்கொரியாவின் சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.

ஆனால், இந்த முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தென்கொரிய நாடாளுமன்றம் தாமதம் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த டிரம்ப், அந்நாட்டின் கார்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக எச்சரித்தார். இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதால், தென்கொரிய அரசு தற்போது இறங்கி வந்துள்ளது.

இதற்காக “அமெரிக்க முதலீட்டுக்கான சிறப்புச் சட்டம்” என்ற புதிய சட்ட முன்வடிவை அந்நாட்டு நாடாளுமன்றக் குழு மார்ச் 9, 2026 அன்று அங்கீகரித்துள்ளது.  இச்சட்டம் வரும் மார்ச் 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம் கப்பல் கட்டும் தளம் மற்றும் செமி-கண்டக்டர் தயாரிப்பு போன்ற துறைகளில் அமெரிக்காவில் மிகப்பெரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படும்.