2026-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த வெற்றியில் இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் அரைசதங்கள் முக்கியப் பங்காற்றின. இந்நிலையில், போட்டிக்குப்பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இரு இளம் வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின்போது, “தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி, மோசமான பார்ம் மற்றும் கடினமான சூழலை எப்படிச் சமாளிப்பது?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குத் தான்தான் பதில் சொல்வேன் என்று இஷானும், அபிஷேக்கும் போட்டி போட்டுக்கொண்டு மைக்கை எடுக்க முயன்றனர்.
The Struggle between Ishan Kishan & Abhishek Sharma! 😂
Ishan Kishan – Me 2 saal se bahar hu
Abhishek Sharma – Mera 1 Mahina 2 saal ke brabar hai… 😭pic.twitter.com/hCvFDgOBI0
— Rohit Sharma Fan (@hitmanfanfollow) March 9, 2026
இந்தச் சூழலில், “நான் இதற்குப் பதில் சொல்கிறேன். நீ ஒரு மாதமாகத்தான் பார்மில் இல்லை, ஆனால் நான் இரண்டு ஆண்டுகளாக அணியில் இடம்பெறாமல் இருந்தேன்” என்று இஷான் கிஷன் நகைச்சுவையாகக் கூற, அபிஷேக் சர்மா அதற்கு, “என் பார்ம் அவுட் ஒரு மாதமாக இருந்தாலும், அது எனக்கு ஒரு வருடம் போல நீண்டதாகத் தெரிந்தது” என்று பதிலளித்தார். மீண்டும் இஷான், “அது இரண்டு வருடம் போலத் தெரியவில்லை அல்லவா?” என்று சிரிப்புடன் கேட்க, அரங்கமே கலகலப்பானது.
தொடர்ந்து தனது கருத்துகளைப் பகிர்ந்த அபிஷேக் சர்மா, “ஒரு வீரரின் மோசமான காலத்தில் நம்முடன் இருக்கும் மனிதர்கள் மிக முக்கியமானவர்கள். நான் ரன் குவிக்க முடியாமல் திணறியபோது, அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர்கள் என யாருமே என் மீது சந்தேகப்படவில்லை. ஆனால், எனக்கு என் மீது சந்தேகம் இருந்தது. அந்தச் சமயத்தில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் காட்டும் நம்பிக்கையே மீண்டும் நம்மைத் தலைநிமிரச் செய்கிறது,” என்றார்.
இதற்கு ஆதரவாகப் பேசிய இஷான் கிஷன், “தன்னம்பிக்கை தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. நமக்கே நம் மீது சந்தேகம் வரும்போதுதான் அழுத்தம் அதிகரிக்கிறது. கடின உழைப்பு மற்றும் நேர்மறையான எண்ணங்கள் இருந்தால், மீண்டும் வெற்றியைப் பெறலாம். நான் உள்நாட்டுத் தொடர்களில் விளையாடியபோது, அணியின் வெற்றிக்காக மட்டுமே கவனம் செலுத்தினேன்,” என்று தெரிவித்தார்.
தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன், முக்கியமான இறுதிப்போட்டியில் மீண்டும் தனது பார்மை மீட்டெடுத்த அபிஷேக் சர்மா என இருவருமே இந்திய அணியின் இளம் நம்பிக்கைகளாகத் திகழ்கின்றனர். களத்தில் பந்துகளைத் துவம்சம் செய்த இவர்கள், களத்திற்கு வெளியே தங்களின் முதிர்ச்சியான பேச்சால் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.
