உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத முடிவுக்குச் சிறுமிகளின் ‘தென் கொரிய’ கலாச்சார மோகம் காரணமாக இருக்கலாம் எனத் தந்தை தெரிவித்துள்ள புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11, 14 மற்றும் 16 வயதுடைய  சகோதரிகள் வசித்து வந்தனர். கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், இவர்கள் தங்களது வீட்டின் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிறுமிகளின் தந்தை இது குறித்துக் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று இரவு 10 மணியளவில் நான் அவர்களிடம் பேசினேன். அப்போது அவர்கள் தங்களைத் தென் கொரியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு மீண்டும் வற்புறுத்தினர். நான் மறுத்துவிட்டேன். கொரியாவுக்கு அனுப்பவில்லை என்றால் ‘இறந்துவிடுவோம்’ என்று அவர்கள் என்னிடம் கூறினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டனர். இந்தியப் பெயர்களைப் பயன்படுத்தப் பிடிக்காமல், தங்களது பெயர்களைக் கூட கொரியப் பெயர்களாக மாற்றிக் கொண்டனர்” என்றார்.

மேலும், சிறுமிகள் கொரிய இசை (K-Pop) மற்றும் நாடகங்களுக்கு (K-Drama) அடிமையாகிவிட்டதாகவும், இந்திய கலாச்சாரம் பற்றிப் பேசினாலே அவர்கள் கோபப்பட்டு உணவைத் தவிர்ப்பார்கள் என்றும் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்தத் தற்கொலைகளுக்கு ‘ஆன்லைன் கேமிங்’ (Online Gaming) காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து டிரான்ஸ்-ஹிண்டன் மண்டல துணை காவல் ஆணையர் நிமிஷ் பாட்டீல் கூறுகையில்: சிறுமிகள் பயன்படுத்திய மொபைல் போனை ஆய்வு செய்ததில், ஆன்லைன் விளையாட்டு தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சந்தேகத்திற்கிடமான அழைப்புகளோ அல்லது செய்திகளோ இல்லை. தற்போது வரை இது தற்கொலை வழக்காகவே விசாரிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை விற்ற இரண்டு பழைய மொபைல் போன்களைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

சிறுமிகள் கொரிய கலாச்சாரத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். தந்தை கூறும் ‘ஆன்லைன் பணி சார்ந்த விளையாட்டு’ (Task-based games) தொடர்பான புகார்களில் உண்மை இருக்கிறதா என்பது குறித்துக் குடும்பத்தினரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த சிறுமிகள் நள்ளிரவு வரை மொபைல் போன் பயன்படுத்தியதும், பின்னர் பூஜை அறைக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து குதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் நவீன டிஜிட்டல் உலகில் சிறுமிகளின் மனநிலை மற்றும் கலாச்சாரத் தாக்கம் குறித்துப் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.