தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மாநிலம் முழுவதும் த.வெ.க-வுக்குச் சாதகமாக இருந்தாலும், தென்மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் விஜய்யின் கட்சிக்குக் கடும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் த.வெ.க-வால் ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. குறிப்பாக, சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திலிபன் ஜெய்சங்கர் வெற்றி பெற்றுள்ள நிலையில், த.வெ.க 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது அக்கட்சியினரிடையே ஓரளவுக்கு ஆறுதலைத் தந்தாலும், மற்ற தொகுதிகளில் த.வெ.க 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

​வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி வாகை சூடியுள்ளனர். தென்காசியில் கலை கதிரவனும், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியனும் தங்களது வெற்றியை உறுதி செய்துள்ளனர். இந்தத் தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்கள் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கன்னியாகுமரியைத் தொடர்ந்து தென்காசியிலும் த.வெ.க கணக்கைத் தொடங்கத் தவறியது, தென்மாவட்டங்களில் அக்கட்சி இன்னும் வலுவாகக் காலூன்ற வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது.