தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்று அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் 118 ஆகும். தற்போது எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், இழுபறி நீடிக்கிறது. எனினும், முதல் தேர்தலிலேயே 108  இடங்களில் வெற்றி  பெற்றுள்ள விஜய்யின் தவெக சாதனை படைத்துள்ளது.

திமுக பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: ஜனநாயக அரசியலில் தேர்தல்கள் என்பது ஒரு பகுதி மட்டுமே. எனது அருமை நண்பரும், திமுக தலைவருமான திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் துள்ளிக் குதிப்பவரும் அல்ல; தோல்வியால் வாடிப் போகிறவரும் அல்ல. அவர் மீண்டும் போராடுவார், மீண்டும் வெல்வார். அதே சமயம், களம் கண்ட முதல் தேர்தலிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த எழுச்சியைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ஈர்க்கத்தக்க வகையில் வெற்றியைப் பதிவு செய்துள்ள தவெக-விற்கு வாழ்த்துகள். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும்,” எனப் பிரதமர் பதிவிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தின் பாரம்பரிய இருமுனைப் போட்டியை உடைத்து, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.