கன மழை, வெள்ளத்தால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தொடர் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினோம். அதேபோல, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் 16 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரத்திற்கான நிவாரணத் தொகை வழங்கினோம். இத்தகைய துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது கழக அரசும் – கழகமும் அனைத்து வகையிலும் துணை நிற்போம் என உறுதி அளித்தோம்.

அண்மையில் பெய்த அதிகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில், மீட்பு – நிவாரணம் – சீரமைப்பு பணிகளை கழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையடுத்து தற்போது உள்ள சூழல் & அடுத்து மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து, மாண்புமிகு அமைச்சர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் – அரசு அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.

இக்கூட்டத்தின் போது, வெள்ளப்பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பை விரைந்து முடிக்கவும், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் – பயிர்ச்சேதம், முழுமையாகவும் – பகுதியாகவும் இடிந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் ஆகியவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்குவது பற்றியும் ஆலோசனை செய்தோம். குறிப்பாக, மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளின் போது பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை தொகுத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வது, மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை தூர் வாருவது பற்றியும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.

தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட நம்முடைய கழக அரசும் – கழகமும் தொடர்ந்து பக்கபலமாக இருந்து, அதற்குரிய பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, போர்வை, கைலி, புடவை போன்ற பொருட்களை நிவாரணமாக வழங்கும் பணியை மாநகரத்தில் உள்ள 3-ம் மைல் பகுதியில் இன்று தொடங்கி வைத்தோம். அவர்கள் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர துணை நிற்போம் என நம்பிக்கையூட்டினோம்” என தெரிவித்துள்ளார்.