பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள முன்னா சக் பகுதியில் இயங்கி வரும் ‘ஷம்பு பெண்கள் விடுதி’யில் தங்கி நீட் (NEET) தேர்விற்குத் தயாராகி வந்த ஜெகனாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்த பாட்னா காவல்துறை, மாணவி தூக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால் உயிரிழந்ததாகவும், அவரது செல்போன் தேடல் வரலாற்றில் தற்கொலை தொடர்பான தகவல்கள் இருந்ததாகவும் கூறி, இதனைத் தற்கொலை எனச் சித்தரிக்க முயன்றது. ஆனால், மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், இது திட்டமிட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வந்தனர்.

தற்போது வெளியாகியுள்ள முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, குடும்பத்தினரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாலியல் வன்முறை நடந்ததற்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

காவல்துறைக்கு எதிராகத் திரண்ட பொதுமக்கள்: 

இந்த வழக்கை மூடிமறைக்க முயன்றதாகக் கூறி பாட்னா காவல்துறையினருக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். பாட்னாவின் ஆர்-பிளாக் முதல் வருமான வரி அலுவலகச் சந்திப்பு வரை நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளிகளைத் தூக்கிலிடவும் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சமூக வலைதளங்களிலும் பாட்னா காவல்துறைக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கடும் நெருக்கடிக்கு உள்ளான போலீசார், விடுதி உரிமையாளர் மணீஷ் குமார் ரஞ்சனைக் கைது செய்துள்ளனர். மேலும், விடுதியில் தங்கியிருந்த சிலரிடமும், விடுதி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விரைவு நீதிமன்ற விசாரணைக்குக் கோரிக்கை: 

மாணவியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பீகார் முழுவதும் வலுத்துள்ளது.

மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்தச் சம்பவம் பீகாரில் பெண்கள் விடுதிகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.