ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எட்டுப் பெண்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் இந்த முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார்.

இந்தப் பெண்களை விடுதலை செய்வது இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்றும், அவர்களின் உயிருக்கு எந்தத் தீங்கும் விளைவிக்க வேண்டாம் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், டிரம்ப்பின் இந்தக் கோரிக்கையை ஈரான் நீதித்துறை மறுத்துள்ளது. இது ஒரு தவறான செய்தி என்றும், அவர் குறிப்பிட்ட எட்டுப் பெண்களில் சிலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் மீது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளதாகவும் ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.