ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலகையே உலுக்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். ஈரானின் முக்கிய துறைமுகங்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள்ள போதிலும், தற்காலிக அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த போர் நிறுத்த அறிவிப்பு சர்வதேச அரங்கில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டாலும், இது ஒரு தற்காலிகமான தீர்வாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம், இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானுக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்று ஈரான் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தலையீட்டை ஈரான் நிராகரித்துள்ளதால், அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது குழப்பமான நிலையில் உள்ளன. அமெரிக்காவின் எச்சரிக்கைகளுக்குத் தாங்கள் அடிபணியப் போவதில்லை என்றும், நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதையும் தாங்கள் நடத்தவில்லை என்றும் ஈரான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
