பாங்காக்: தாய்லாந்தின் பிரபல புத்த கோவிலில், துறவிகளுடன் நெருக்கமாக பழகி, அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெற்று, மிரட்டி பணம் பறித்து வந்த விலாவன் எம்சாவாட் (வயது 35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இவர் ரூ.100 கோடிக்கும் மேல் பணம் பறித்திருப்பது அம்பலமானது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் உள்ள ஒரு பிரபல புத்த கோவிலின் தலைமை துறவி சமீபத்தில் துறவறம் வாழ்க்கையை திடீரென கைவிட்டார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விலாவன் என்ற பெண் துறவியுடன் நெருங்கி பழகி, பின்னர் “நான் கர்ப்பமாக இருக்கிறேன்” எனக் கூறி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக தெரிந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் விலாவனைக் கைது செய்தனர். அவருடைய மொபைல் போனில் ஆயிரக்கணக்கான துறவிகளுடன் இருக்கும் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவருடைய வங்கி கணக்குகளுக்குள் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த பணத்தில் பெரும்பகுதி ஆன்லைன் சூதாட்டங்களில் இழந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விலாவனுடன் நெருக்கமாக இருந்த பல துறவிகள், இவரால் மிரட்டப்பட்ட நிலையில், பயந்துபோய் கோவிலுக்கான நன்கொடை பணத்திலிருந்தே அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி பிரச்னையை முடித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தாய்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
