ரஷ்யா-உக்ரைன் போர் மூன்றாண்டுகளை கடந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இருப்பினும், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வாங்கி வருகின்றன. இதை கண்டித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் நேட்டோ அமைப்பின் புதிய தலைவர் மார்க் ருட்டே ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா சென்ற மார்க் ருட்டே, அதிபர் டிரம்ப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, ரஷ்யா மீது மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில், ரஷ்யாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நாடுகள், குறிப்பாக இந்தியா, சீனா, பிரேசில் ஆகியவை, ரஷ்ய அதிபர் புடினை தொடர்பு கொண்டு 50 நாட்களுக்குள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும், அந்தக் கால அவகாசத்திற்குள் அமைதி ஏற்படவில்லை எனில், அந்த நாடுகள் மீது 100 சதவீத வரி உட்பட கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை கூறப்பட்டது.
மேலும், உக்ரைனுக்கு வலுவான ஆதரவாக, அமெரிக்கா புதிய ஒப்பந்தத்தின் கீழ் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்க உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி செய்யும் திட்டத்தையும் ஒருங்கிணைக்கப்போவதாகவும் மார்க் ருட்டே தெரிவித்தார்.
இந்த நிலைமை, இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளுக்கு பெரும் அழுத்தமாக இருக்கலாம் என வெளிநாட்டு அலுவலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
