சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டுத் துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மையப்படுத்திப் பல முக்கிய அறிவிப்புகளை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
எதிர்காலத் தொழில்நுட்பப் புரட்சிக்கு இந்திய இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கில், அடுத்த ஓராண்டிற்குள் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். மேலும், கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயனடையும் வகையில், அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் நாட்டின் திறமைகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியும் வகையில், 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களின் விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்க நாடு தழுவிய அளவில் புதிய சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தொழில்துறை மற்றும் ஆற்றல் துறையில் இந்தியாவின் சுயசார்பை வலுப்படுத்த, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 7 முதல் 8 புதிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்த பிரதமர், வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 GW அணுசக்தி உற்பத்தியை எட்டும் பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் தொடக்கமாக அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் 5 புதிய அணு உலைகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
