இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (வயது 70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (வயது 58) ஆகியோர், கடந்த 2018ஆம் ஆண்டு தங்களது மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டை வாங்கினர்.

அப்போது, தற்காலிக வசதிக்காக உதவி தேவைப்படும் ஒரு பழைய நண்பருக்கு அந்த வீட்டை வாரத்திற்கு வெறும் £30 (இந்திய மதிப்பில் ₹3,400) வாடகைக்கு கொடுத்தனர். ஆனால், அந்த நபர் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட வாடகை செலுத்தாமல் வீடையே அபரிமிதமாக குப்பை வீடாக மாற்றி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வீடைக் காண சென்ற தம்பதியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஏனெனில், அந்த வீட்டில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பீர் கேன்கள், சிறுநீர் நிரம்பிய பைகள், மலம் நிரம்பிய பைகள் என வீடு முழுவதும் அராஜகமாக வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

“நாங்கள் அவரை நண்பர் என்பதற்காக மட்டுமே இந்த வீட்டை தற்காலிகமாக தங்க அனுமதித்தோம். ஓவியம் வரைவதற்காகவே வீடு தேவை என கூறியதால் அனுமதி அளித்தோம். ஆனால் அவர் எங்களின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை” என வருத்தத்துடன் கூறியுள்ளார் கிறிஸ்.

இந்த மோசமான சூழ்நிலையில் அந்த வீட்டை மீண்டும் பழையபடி மாற்ற தம்பதியர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களது மகள் தற்போது வீட்டை சுத்தம் செய்யும் செலவுகளுக்காகவும், புனரமைக்க தேவையான உதவிக்காகவும் GoFundMe இணையதளத்தில் நிதி சேகரிப்பு பணி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.