பெங்களூரைச் சேர்ந்த தர்மசீலம் – மஞ்சு தம்பதி 2022 செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆனாலும், அவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்திற்குப் பிறகு, தர்மசீலம் வேலைக்காக துபாய்க்கு சென்று, அங்கு கட்டிடத் தொழிலாளியாக (மேஸ்திரி) பணியாற்றி வந்தார். மஞ்சு, பெங்களூரில் தனது தந்தை பெரியசாமியுடன் வாடகை வீட்டில் வசித்து, ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணிபுரிந்து வந்தார்.
என்ன காரணமோ தெரியவில்லை, ஆனால் சமீபத்தில் தர்மசீலம் திடீரென துபாயிலிருந்து பெங்களூருக்கு திரும்பி வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு, மாமனார் பெரியசாமி வெளியே சென்றிருந்ததைப் பார்த்த தர்மசீலம், தனது மனைவி மஞ்சுவை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர், அவர் தானும் வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிறு கட்டி தற்கொலை செய்து கொண்டார். இரவு 9:30 மணியளவில் வீடு திரும்பிய பெரியசாமி, வீட்டு கதவைத் திறந்து, உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஒரு பக்கம் ரத்த வெள்ளத்தில் மகள் மஞ்சு, மறுபக்கம் கயிற்றில் தொங்கிய தர்மசீலத்தைப் பார்த்து மனமுடைந்து போனார்.
சம்பவம் குறித்து தகவல் பெற்ற காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மஞ்சு கத்திக் குத்து காயங்களுடன் படுக்கையில் கிடந்ததையும், தர்மசீலம் நைலான் கயிற்றில் மின்விசிறியில் தொங்குவதையும் காவலர்கள் கண்டனர்.
இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தர்மசீலம் இப்படி ஒரு மோசமான முடிவை ஏன் எடுத்தார் என்பது விசாரணையில் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
