அரியானா மாநிலம் பானிபத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கடத்தல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு பெண் உட்பட நான்கு யூடியூபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது அனுபவத்தைப் பகிர்ந்து, தன்னை வலுக்கட்டாயமாக காரில் தள்ளி காட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். அவர் ரிஃபைனரி ரோடு அருகே காட்டில் மரக்கட்டைகள் சேகரிக்கச் சென்றிருந்தார். அங்கு கிரண் என்ற பெண் யூடியூபரைச் சந்தித்தார்.

கிரண், அவர் தவறான செயலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, மூன்று இளைஞர்களுடன் (அமன், அஷ்வினி, மாஸ்டர் சந்தீப்) உறவு வைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். பெண் மறுத்ததும், நால்வரும் பெண்ணை  காரில் தள்ளி காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மூன்று இளைஞர்களும் ஒவ்வொருவராக அவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர் எதிர்த்தபோது, அவரை அடித்து மிரட்டினர். கிரண், கையில் கட்டையுடன்  காவலுக்கு நின்றார்.

பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, குற்றவாளிகள் அந்தப் பெண்ணை மிரட்டினர். இந்தச் சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், அவரது வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி அவமானப்படுத்துவோம் என்றும், கொலை செய்வோம் என்றும் அச்சுறுத்தினர்.

ஆனால் அந்த பெண் காவல் கண்காணிப்பாளரை (SP) சந்தித்து எழுத்து மூலம் புகார் அளித்தார். அதன் பிறகு, காவல்துறை நான்கு குற்றவாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் உறுதியளித்தது.