தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நாடக மேடையிலிருந்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர், தொடக்கத்தில் வெற்றி எதுவும் இல்லாமல் இருந்தாலும், 80களில் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார்.

பின்னர் பாஜகவில் சேர்ந்து எம்.எல்.ஏவாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ஹரியின் “சாமி” படத்தின் மூலம் “பெருமாள் பிச்சை” என்ற வித்தியாசமான வேடத்தில் அறிமுகமாகி பெரும் புகழைப் பெற்றார்.

“சாமி” படத்தில் அவரது வித்தியாசமான நடிப்பு, பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த கேரக்டர் அவருக்கு புதிய அடையாளம் ஆகியது. பின்னர் விஜய் நடித்த “திருப்பாச்சி” படத்தில் “சனியன் சகடை” என்ற வேடத்தில் மீண்டும் கலக்கினார்.

அதன் பிறகு கோ, ஐ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்தார். இவர் நடித்த வேடங்கள் பெரும்பாலும் வித்தியாசமான கேரக்டர்கள் என்பதால், ரசிகர்களின் மனதில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.

கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர், சமீபத்தில் மிகவும் மெலிந்த நிலையில் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைந்து திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோட்டா சீனிவாச ராவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார். அவரது மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் சில திரைப்படங்களில் நடித்தவர். 2010ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மகனின் மரணம் கோட்டாவுக்கு பெரிய மன உளைச்சலாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால்தான் அவரால்  மீண்டும் முழுமையாக சுறுசுறுப்பாக திரைத்துறையில் ஈடுபட முடியவில்லை என்றும், மன துன்பமே அவரது உடல்நிலை மேலும் பாதிக்க காரணமாக இருந்தது என்றும் அவரது அருகிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.