அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே டிடிவி தினகரனின் பழைய வீடியோக்களை இணையவாசிகள் தேடி எடுத்து வைரலாக்கி வருகின்றனர். வெறும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை, “எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்” என்றும், “ஈபிஎஸ் ஒரு தீயசக்தி, வரும் தேர்தலில் அவரை மக்கள் வீழ்த்த வேண்டும்” என்றும் தினகரன் மிகக் கடுமையாகப் பேசி வந்தார். இப்போது அதே ஈபிஎஸ்-உடன் அவர் கூட்டணி வைத்திருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், “தீயசக்தி என்று சொன்னவருடன் இப்போது எப்படி கைகோர்க்க முடிந்தது?” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தினகரனை சரமாரியாகக் கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். கொள்கைகளை விட தேர்தல் வெற்றிக்காக எடுக்கப்பட்ட இந்த ‘யு-டர்ன்’ முடிவு, வரும் தேர்தலில் தினகரனுக்குச் சாதகமாக இருக்குமா அல்லது அவரது முந்தைய பேச்சுகளே அவருக்குப் பின்னடைவாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.