மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் மதியம் திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மர சாமான்கள் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.