கார்ப்பரேட் நிறுவனங்களில் செலவுக் குறைப்பு என்ற பெயரில், பல வருட அனுபவம் வாய்ந்த ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்யும் ‘லே-ஆஃப்’ (Lay-off) கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் சந்திக்கும் மன உளைச்சல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், ஊழியரை அவமதித்து வெளியனுப்பிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு, அதே ஊழியரால் தக்க பாடம் புகட்டப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் ‘ரெடிட்’ (Reddit) சமூக வலைத்தள பக்கத்தில் தனது குமுறலையும், தனக்குக் கிடைத்த வெற்றியையும் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்ட நிறுவனத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து, மிக முக்கியத் தரவுகளை கையாண்டு வந்துள்ளார். அனைத்தும் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த வேளையில், தீபாவளிப் பண்டிகைக்கு வெறும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், நிறுவன மேலாண்மை அவரை அழைத்துள்ளது. “நாளை முதல் நீங்கள் வேலைக்கு வரத் தேவையில்லை; நிறுவனத்திற்கு உங்கள் சேவை இனி தேவையில்லை” என்று கூறி, எவ்வித முன்னறிவிப்புமின்றி அவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
பண்டிகை காலத்தில், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில், திடீரென வேலை பறிபோனதால் அந்த ஊழியர் கடும் பொருளாதார நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார். பணிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்ட அந்த ஊழியர், சில நாட்களிலேயே மற்றொரு சிறந்த நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்தார். ஆனால், அவர் வேலை பார்த்த பழைய நிறுவனத்திலோ நிலைமை தலைகீழாக மாறியது.
இவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட புதிய ஊழியரால், அந்த நிறுவனத்தின் முக்கியத் தரவுத்தளங்களை கையாள முடியவில்லை. அந்தத் தரவுகள் மற்றும் சிஸ்டம் குறித்த முழுமையான விவரங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு மட்டுமே தெரிந்திருந்ததால், நிறுவனம் கடுமையான தொழில்முறை பாதிப்புகளையும், நஷ்டத்தையும் சந்திக்கத் தொடங்கியது.
அனுபவம் வாய்ந்த ஊழியரைத் தூக்கியெறிந்ததால் வந்த விளைவை உணர்ந்த நிறுவன மேலாண்மை, சரியாக 6 மாதங்களுக்குப் பிறகு, வேறு வழியின்றி மீண்டும் அந்தப் பழைய ஊழியரைத் தொடர்புகொண்டது. நிறுவனத்தின் தரவுகளைப் புரிந்துகொள்ள உதவுமாறும், மீண்டும் தங்களது நிறுவனத்திலேயே பணியில் சேருமாறும் அவரிடம் கெஞ்சத் தொடங்கியது.
இதுகுறித்து அந்த ஊழியர் தனது பதிவில், “சரியாக 6 மாதங்களுக்குப் பிறகு, பழைய நிறுவனத்திலிருந்து தரவுகளைக் கேட்டு எனக்கு போன் வந்தது… நான் பலத்த குரலில் ஒருமுறை சிரித்துவிட்டு, பதிலேதும் கூறாமல் போனை கட் செய்துவிட்டேன்!” என்று பதிவிட்டுள்ளார். இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த வேலைக் கலாச்சாரத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “நிறுவனங்கள் ஊழியர்களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை, வெறும் கருவிகளாகவே பார்க்கின்றன. தகுதியான நபர் வெளியேறும்போதுதான் நிறுவனங்களுக்கு அவர்களின் அருமை புரிகிறது” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பண்டிகை காலத்தில் ஒரு குடும்பத்தின் நிலையை யோசிக்காத நிறுவனத்திற்கு இது தகுந்த பாடம் என்றும், அந்த ஊழியர் உதவி செய்ய மறுத்தது முற்றிலும் சரியே என்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
