மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 80 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் எந்தவொரு வெளிப்புறக் கீறலும் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்றில் இருந்த பெரிய கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வாயில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக டெல்லியில் உள்ள யதார்த்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவருக்கு, வயிற்றின் மேல் பகுதியில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் வழக்கமாக இத்தகைய கட்டிகளை அகற்ற பெரிய அளவிலான அறுவை சிகிச்சை, நீண்ட நாட்கள் மருத்துவமனை வாசம் மற்றும் வாரக்கணக்கில் ஓய்வு தேவைப்படும். ஆனால், மருத்துவர்கள் ‘எண்டோஸ்கோபிக் ஃபுல்-திக்னஸ் ரிசெக்ஷன்’ என்ற அதிநவீன எண்டோஸ்கோபி முறையைப் பயன்படுத்தி, முதியவரின் வாய் வழியாகக் குழாயைச் செலுத்தி, வெளிப்புறக் காயம் எதுவும் இன்றி அக்கட்டியை முழுமையாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதனால் கட்டி அகற்றப்பட்ட பிறகு வயிற்றுச் சுவரில் ஏற்பட்ட துவாரத்தையும் மருத்துவர்கள் உள்வழியாகவே தையல் ஏதுமின்றி நவீனக் கருவிகள் மூலம் மூடினர். இந்த அதிநவீனத் தொழில்நுட்பத்தின் மூலம், அறுவை சிகிச்சை முடிந்து வெறும் 24 மணி நேரத்திற்குள் அந்த முதியவர் ஆரோக்கியமாகத் தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.
இந்த தழும்புகளற்ற அறுவை சிகிச்சை முறை முதியவர்கள், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர் துருவ் காந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார். வழக்கமான அறுவை சிகிச்சைகளில் ஏற்படும் அதிகப்படியான வலி, தொற்று மற்றும் 7 முதல் 10 நாட்கள் வரையிலான மருத்துவமனை தங்குவதைத் தவிர்த்து, நோயாளிகள் விரைவாகக் குணமடைய இத்தகைய மருத்துவ முன்னேற்றங்கள் பெரிதும் உதவுகின்றன.
