ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள்   இருந்தும், நேரத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடப்பது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு பீகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரு குடும்பம், அதிவேகமாக வந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கிய பின்னரும், தாயின் துணிச்சலால் நூலிழையில் உயிர் தப்பிய நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஷாக்பூர் படோரி ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஒரு தாய் தனது மூன்று குழந்தைகளுடன் தண்டவாளத்தைக் கடந்து அடுத்த நடைமேடைக்குச் செல்ல முயன்றுள்ளார். குடும்பத்தின் மற்ற இரு உறுப்பினர்கள் தண்டவாளத்தைக் கடந்து நடைமேடையில் ஏறிவிட்ட நிலையில், இந்தத் தாயும் மூன்று குழந்தைகளும் தண்டவாளத்தின் நடுவே இருக்கும்போது, எதிர்பாராத விதமாக அதிவேக சரக்கு ரயில் ஒன்று அதே பாதையில் வந்துள்ளது.

மரண விளிம்பில் நின்ற அந்தத் தாய், பதற்றமடையாமல் தனது மூன்று குழந்தைகளையும் அணைத்தபடி நடைமேடையின் கீழ் உள்ள சுவரோடு ஒட்டி, தண்டவாளத்தின் ஓரமாக படுத்துக்கொண்டார். அடுத்த சில நொடிகளில் சரக்கு ரயில் அவர்கள் மீது பாய்ந்து சென்றது. சுமார் 10 ரயில் பெட்டிகள் அந்தத் தாய்க்கும் குழந்தைகளுக்கும் மேலாகக் கடந்து சென்றன.

https://x.com/i/status/2055271531299869116

இதனை நடைமேடையில் இருந்து பார்த்த பயணிகள் அலறியடித்துக் கூச்சலிட்டனர். ரயில் கடந்து செல்லும்போது ஏற்பட்ட உராய்வில் அந்தத் தாய்க்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரயில் முழுமையாகக் கடந்து சென்றதும், நடைமேடையில் இருந்த பயணிகள் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து, அதிர்ச்சியில் உறைந்திருந்த தாயையும் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. எத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும் ஒரு தாய் தன் குழந்தைகளுக்குக் கேடயமாக மாறுவாள் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.

மேலும் “நேரத்தைச் சேமிக்க நினைத்து தண்டவாளங்களை கடப்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல, மரணத்தை நாமே தேடிக்கொள்வதற்குச் சமம். அதிவேக ரயில்களை திடீரென பிரேக் போட்டு நிறுத்த முடியாது. எனவே, பயணிகள் எப்போதும் நடைமேம்பாலங்களையே பயன்படுத்த வேண்டும்” என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.