இயற்கையின் விதிகளின்படி காடுகளில் இரைக்கும் வேட்டை விலங்குக்கும் இடையிலான போராட்டம் நித்தம் நடப்பதே. அந்த வகையில், பனிப் பிரதேசத்தில் இரண்டு ஓநாய்களிடமிருந்து ஒரு சிறிய முயல் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் திக் திக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளத்தில் @TheFigen_ என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, ஒரு பரந்த பனிப் பகுதியில் தொடங்குகிறது. அங்கு ஒரு சிறிய முயலை இரண்டு ஓநாய்கள் மிக வேகமாகத் துரத்துகின்றன. இந்த முழுச் சம்பவமும் ட்ரோன் கேமரா மூலம் மிகத் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஓநாய்கள் பாய்ந்து வரும் வேகத்தைப் பார்க்கும்போது, அடுத்த சில நொடிகளில் முயல் இரையாகிவிடும் என்றே தோன்றுகிறது.
ஆனால், அந்தச் சிறிய முயல் தனது அபாரமான வேகத்தாலும், சரியான நேரத்தில் திசையை மாற்றும் திறமையாலும் ஓநாய்களை நிலைகுலையச் செய்தது. ஓநாய்கள் நெருங்கும் போதெல்லாம் லாவகமாகத் தப்பித்து ஓடிய முயலின் வேகம், வேட்டையாட வந்த ஓநாய்களுக்கே சோர்வைத் தந்தது. இறுதியில், நீண்ட தூரம் துரத்திய ஓநாய்கள் முயலைப் பிடிக்க முடியாமல் பாதியிலேயே ஓட்டத்தை நிறுத்தின.
Drone captures a chase between two wolves and a rabbit.
The rabbit never gives up, it has perfect speed! pic.twitter.com/IOdLtUS2St— The Figen (@TheFigen_) February 27, 2026
சுமார் 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை இதுவரை 66,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ குறித்துப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. “ஓநாய்கள் தங்களது வெற்றிக்காக ஓடின, ஆனால் அந்த முயல் தனது உயிருக்காக ஓடியது. இறுதியில் உயிர் வென்றது என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “எந்தச் சூழலிலும் எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கு இந்த முயலே சாட்சி” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் “முயல் ஒருபோதும் கைவிடாது, அதன் வேகம் சரியானது” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
