தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தோளில் பச்சைத் துண்டு அணிந்து பிரசார வாகனத்தில் ஏறி உரையாற்றினார். திருவாரூர் தியாகராஜன் கோவில் மற்றும் திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம் என்று குறிப்பிட்ட அவர், “நீண்ட நாள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கியது நான்தான் என பெருமை பேசுபவர் யார் என உங்களுக்கு தெரியும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், “ரொம்ப நாளாக ஓடாமல் இருந்த தேரை ஓடவைத்ததாக மார்தட்டிக் கொள்கிறார். ஆனால், அவரது மகன் தமிழ்நாடு என்ற தேரை கட்டையைப் போட்டு ஓடவிடாமல் செய்கிறார்” என உதயநிதி ஸ்டாலினைக் கடுமையாகச் சாடினார்.

திருவாரூரை தங்கள் சொந்த மாவட்டம் எனக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர், இங்கு மக்கள் கருவாடாக காய்ந்து போவதை கண்டுகொள்ளவில்லை என விஜய் குற்றம்சாட்டினார். “எல்லா இடங்களிலும் உங்கள் அப்பா பெயரை வைக்கிறீர்கள், ஆனால் உங்கள் அப்பா பிறந்த திருவாரூரில் ஒரு அடிப்படை சாலை வசதி கூட இல்லை” என்று கூறிய அவர், திருவாரூரில் உள்ள மருத்துவக் கல்லூரி கூட சிகிச்சை பெறும் நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தார். “திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார்” என முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பிய விஜய், அவரது பேச்சு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது. இந்தப் பிரசாரம் திருவாரூரில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.