தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கடந்த வாரம் சனிக்கிழமை (13-ந் தேதி) திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கி, அரியலூரில் தொடர்ந்து பிரசாரம் செய்தார். ஆனால், பெரம்பலூர் பயணத்தை திடீரென ஒத்திவைத்த அவர், இரண்டாவது வாரமாக நேற்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது பேச்சில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் தமிழகத்தில் ஆளும் தி.மு.க. ஆகியவற்றை கடுமையாக விமர்சித்த விஜய், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி எனவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடியும் பேசி வருகிறார்.

விஜய்யின் சமீபத்திய கருத்துகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் பல இடங்களில் பதிலடி கொடுத்தனர். ஆனால், ஒவ்வொரு அமைச்சரின் பதிலும் வெவ்வேறாக இருந்ததால், தி.மு.க. கட்சித் தலைமை அதிருப்தி அடைந்தது. இதையடுத்து, அமைச்சர்கள் இனி விஜயை விமர்சித்து பதில் கூற வேண்டாம் என்றும், எல்லாவற்றையும் கட்சித் தலைமையே பார்த்துக் கொள்ளும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது கட்சித் தலைமையில் இருந்து மட்டுமே வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தி.மு.க. அரசின் கடந்த 4 ஆண்டு சாதனைத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கினால் போதும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதால், தற்போது அமைச்சர்கள் விஜய் குறித்து எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை