தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றினார். நாகப்பட்டினத்தைப் போலவே திருவாரூரும் குடிசைகள் நிறைந்த பகுதியாக உள்ளதாகவும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பல துறைகள் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். “உங்களுடன் ஸ்டாலின் என்று அவரது குடும்பத்தினரிடமும் மட்டுமே பேச முடியும், மக்களிடம் பேச முடியாது” என விமர்சித்த அவர், திருவாரூர் மாவட்டத் தலைநகராக இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சரியான சாலை வசதி இல்லை என்றார். மேலும், நெல் கொள்முதலில் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்கப்படுவதாகவும், ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த 4-4.5 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் கமிஷனாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதை விவசாயிகளே தெரிவித்ததாகவும் விஜய் கூறினார்.

“விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். இது உங்கள் ஆட்சியில் நடந்துள்ளது, சி.எம். சார்!” என்று முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பிய விஜய், இந்த மாவட்ட அமைச்சரின் வேலை முதலமைச்சர் குடும்பத்திற்கு சேவை செய்வது மட்டுமே என்று கிண்டல் செய்தார். கல்வி, ரேஷன், மருத்துவம், மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். “உண்மையான மக்களாட்சி, மனசாட்சியுள்ள மக்களாட்சியாக இருக்கும். எங்கு சென்றாலும் இது சும்மா கூடும் கூட்டம், ஓட்டு போட மாட்டார்கள் என்கிறார்கள். இது சும்மா கூடும் கூட்டமா?” என்று தொண்டர்களைப் பார்த்து உணர்ச்சிகரமாக கேள்வி எழுப்பினார். விஜய்யின் இந்தப் பேச்சு, பிரசாரக் கூட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.