ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளார்.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த நிலையில் 5 மாதங்கள் உள்ள ஐபிஎல் போட்டியின் பரபரப்பு இப்போதே கிளம்பியுள்ளது. ஐபிஎல் தொடரின் பரபரப்பான செய்தி என்னவென்றால், மும்பை இந்தியன்ஸ் தனது பழைய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஆம் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப உள்ளார் என ESPNcricinfo தெரிவித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா தனது பழைய மும்பை அணிக்கு திரும்புவார் என்றும், ஹர்திக் பாண்டியாவை மாற்றியதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி கொடுக்கவுள்ளது இந்த வர்த்தகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து எந்த வீரரையும் குஜராத் டைட்டன்ஸ் அணி எடுக்காது என ESPNcricinfo தெரிவித்துள்ளது. கடந்த முறை (2023 ஐபிஎல்) குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் பாண்டியா. அதுமட்டுமில்லாமல் 2022 ஐபிஎல்லில் கேப்டனாக இருந்து குஜராத் அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.

ஹர்திக் 2015 இல் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார் மற்றும் அவர்களுடன் 7 சீசன்களில் விளையாடினார். அதில் மும்பை அணியை 4 முறை சாம்பியனாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மும்பை அணி மொத்தம் 5 முறை சாம்பியன் ஆகியுள்ளது. 2022 இல் ஹர்திக் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) க்கு சென்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. மறுபுறம், ஹர்திக் தலைமையில் தங்களது முதல் ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் ஆனது, பின் ஐபிஎல் 2023 இல் இறுதிப் போட்டி வரை சென்று சென்னை அணியிடம் தோற்றது.

36 வயதான ரோஹித் இன்னும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், ஆனால் அவரது கேரியரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் தான் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு நவம்பர் 26 அன்று மாலை 4 மணிக்கு இந்திய நேரப்படி முடிவடைகிறது. எனவே இதற்குள் மும்பை அணி நிர்வாகம் விரைவில் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கும்.

கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ரோஹித், சிறப்பான பார்மில் உள்ளார். கடந்த உலகக் கோப்பையில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்களில் ரோஹித் 2வது இடத்தில் இருந்தார். ஹிட்மேன் சிக்ஸர்களின் அடிப்படையில் உலக சாதனையையும் முடித்திருந்தார். மறுபுறம், போட்டியின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். உலகக் கோப்பையின் முதல் 4 போட்டிகளில் விளையாடிய பாண்டியா காயம் காரணமாக வெளியேற வேண்டியிருந்தது. ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு நேரடியாக ஐபிஎல்லில் ஆடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கிடையே அவர் டி20 போட்டியில் ஆடுவாரா என்பதை பார்க்க வேண்டும்.