கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவை அறிமுகம் செய்தபோது, அவர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து, தருமபுரியில் பிரசாரத்திற்கு வந்த பிரேமலதாவுக்கு விசிக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “எங்கள் தலைவரை அவமதித்தவருக்கு இங்கே இடமில்லை” எனக்கூறி, அவருக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
திருமாவளவனை அவமதித்ததாகக் கூறி விசிகவினர் காட்டிய இந்த அதிருப்தி, கூட்டணிக்குள்ளேயே ஒரு விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. பிரேமலதாவுக்கு எதிராகத் திரண்ட தொண்டர்களைப் பார்த்துப் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் தலையிட்டுச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விஜயகாந்தின் மனைவிக்கே நேர்ந்த இந்தச் சோதனை இப்போது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக் ஆகியுள்ளது.
