தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் திருமாவளவனை விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. “திருமாவளவனை திமுக ஒரு அடியாளாகத்தான் பயன்படுத்துகிறது” என்றும், “விசிக-வில் 20 பேர் மட்டும்தான் இருக்கிறார்கள்” என்றும் அவர் பேசியது விசிக தொண்டர்களைக் கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. இந்த விவகாரத்தைப் பற்றி தவெக நிர்வாகி அருண்ராஜ் பேசும்போது, “ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே இதற்கு விளக்கம் அளித்துவிட்டார், இனி இதைப் பற்றிப் பேசத் தேவையில்லை; திமுக-வின் ஊழல்களைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும்” என்று மழுப்பலாகப் பதில் சொல்லியிருக்கிறார்.
விசிக-வினர் மத்தியில் எதிர்ப்பு வலுத்ததால், ஆதவ் அர்ஜுனா ஒரு நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் சொல்ல வந்த விஷயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, நான் பேசியதைத் திமுக தலைமைதான் வேண்டுமென்றே திரித்துவிட்டது” என்று கூறியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு கிடைக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், பழைய விசிக நண்பர்களின் வருத்தத்தை மதிப்பதாகவும் சமாதானம் பேசியுள்ளார். சுருக்கமாகச் சொன்னால், தன் பேச்சால் வந்த சிக்கலைத் தீர்க்க இப்போது திமுக பக்கம் பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார் ஆதவ் அர்ஜுனா.
