மதுரை மேலூர் அருகே நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்ற பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணு, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விஜய் அரசியலில் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்றும், லட்சக்கணக்கில் திரளும் ரசிகர்களின் உயிரைப் பணயம் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு வருடத்தில் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பது விளையாட்டு அல்ல என்று குறிப்பிட்ட அவர், தொண்டர்களை அரசியல் ரீதியாக நல்வழிப்படுத்த வேண்டிய கடமை விஜய்க்கு இருப்பதாகவும், உடன் இருப்பவர்களைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆன்மீகம் மற்றும் அரசு நிர்வாகம் குறித்துப் பேசிய மகாவிஷ்ணு, பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயர்ந்துள்ளதாகவும், ஜப்பானை முந்தி ஜிடிபி (GDP) வளர்ச்சியில் இந்தியா வலிமையான நாடாக மாறி வருவதாகவும் பாராட்டியுள்ளார்.
தமிழக அரசின் செயல்பாடு குறித்துப் பேசுகையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கலவரம் வராமல் தடுத்ததற்காக அரசைப் பாராட்டியதுடன், ராஜராஜ சோழன் போன்ற மாமன்னர்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என்றும் கறாராகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், காவல்துறையினர் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் இந்தப் பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
