சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்திப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பதிவு செய்தார்.
“பாஜக-வின் ‘டப்பா எஞ்சின்’ அரசியலுக்குத் தமிழகத்தில் இடமில்லை; திராவிட மாடல் ஆட்சி நாடே வியக்கும் திட்டங்களால் தமிழகத்தை உச்சத்திற்கு ஏற்றியுள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், அண்மையில் வெளியான சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 45 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆதரவு வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதேசமயம் கருத்துக் கணிப்புகளை நம்பித் தொண்டர்கள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்றும், இப்போதே பரப்புரைப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, அதிமுக-வைக் கடுமையாகச் சாடிய அவர், “அதிமுக என்பது தனி அரசியல் கட்சி அல்ல; அது பாஜக-வின் ஒரு கிளை அமைப்புதான். எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி கொடுக்காத வாக்குறுதிகளைக் கூட அளித்து வருகிறார்” என்று விமர்சித்தார். திராவிட இயக்கமும் கம்யூனிச இயக்கமும் ஒன்றிணைந்து நின்றால் பாசிசத்தை நிச்சயம் வீழ்த்த முடியும் என்றும் அவர் சூளுரைத்தார்.
