மத்திய பாஜக அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, கேரளா மீதான மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் வன்மத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

“இந்தியாவின் வரைபடத்தில் கேரளா என்ற மாநிலம் இருப்பதையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது; அந்த அளவிற்கு மாநிலத்தின் நியாயமான கோரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்று அவர் கொந்தளித்துள்ளார். கேரளாவின் நீண்ட கால கனவான எய்ம்ஸ் மருத்துவமனை, 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் விழிஞ்சம் துறைமுக வளர்ச்சிக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 41 சதவீதத்திலிருந்து உயர்த்த மறுத்தது கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் செயல் என்று குறிப்பிட்ட அவர், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைப்பதற்கும், சாமானிய மக்களை வறுமையில் தள்ளுவதற்குமே வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், “கேரளாவின் உரிமைகள் பறிபோகும்போது, மத்திய அமைச்சரவையில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கேரளாவின் வளர்ச்சியை முடக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பட்ஜெட்டுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டிப் போராடுவோம் என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.