தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களின் தலைமையிலான அரசுக்கு, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது ஒரு புதிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெறத் தயாராகிவிட்ட நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களையும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

அவருக்கு மிக முக்கியமான துறை ஒதுக்கப்படும் என்றும், இதற்காக அவர் மீண்டும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்றும் விஜய் தரப்பிலிருந்து ரகசிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ​கடந்த வாரம் திருமாவளவனைத் துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில், அந்த வாய்ப்பு நூலிழையில் தவறியது. தற்போது கிடைத்துள்ள இந்த அமைச்சர் பதவி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக அமைச்சரவையில் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பது விசிக தொண்டர்களின் பெரும் விருப்பமாக உள்ளது.

ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு திருமாவளவன் போட்டியிட ஏதுவான சூழலை உருவாக்கவும் தவெக தயாராக உள்ளதாகத் தெரிகிறது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அழைப்பை ஏற்று திருமாவளவன் அமைச்சரவையில் சேருவாரா அல்லது வெளியில் இருந்து ஆதரவு என்ற தனது கொள்கையில் உறுதியாக இருப்பாரா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.