ஒருவரது வாழ்வின் மிக முக்கியமான நாளான திருமணத்தன்று, எதிர்பாராத விருந்தினரின் வருகையால் மணமேடையே போர்க்களமாக மாறிய சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. மணமகனின் முன்னாள் காதலி மேடையில் செய்த சில்மிஷத்தால், மணப்பெண் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மேடைக்கு வந்த இளம் பெண் ஒருவர், திடீரென மணமகனின் கையைப் பிடித்து முத்தமிட்டார். அவர் மணமகனின் முன்னாள் காதலி (Ex-girlfriend) என்பது அங்குள்ளவர்களுக்குத் தெரியவந்தது.

தன்னுடைய திருமண நாளிலேயே, கணவராகப் போகிறவருக்கு மற்றொரு பெண் முத்தமிட்டதைக் கண்டு மணப்பெண் கடும் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரம் தாளாத அவர், உடனடியாக அந்தப் பெண்ணின் கூந்தலைப் பிடித்து இழுத்து மேடையிலிருந்து கீழே தள்ளினார்.

திருமணக் கோலத்தில் இருந்த மணப்பெண் ஆவேசமாகத் தாக்கியதைக் கண்டு அங்கிருந்த உறவினர்களும் நண்பர்களும் ஒரு நிமிடம் உறைந்து போயினர். பின்னர் அங்கிருந்தவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் @NewsAlgebraIND என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “திருமண நாளில் எந்தப் பெண்ணுக்கும் இவ்வளவு கோபம் வருவது சகஜம்தான்” என மணப்பெண்ணுக்கு ஆதரவாகச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். “பொது இடத்தில் முன்னாள் காதலி இவ்வாறு நடந்துகொண்டது முறையற்ற செயல்” என அந்தப் பெண்ணை பலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் முன்கூட்டியே நடந்தது என்றும் தற்போது அந்த பழைய வீடியோ மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.