அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் முதல்முறையாக அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), இஸ்ரேலின் ராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை இலக்கு வைத்து ‘செஜில்’ (Sejil) வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அறிவித்துள்ளது. சுமார் 2000 முதல் 2500 கி.மீ தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணைகள், திட எரிபொருளால் இயங்கக்கூடியவை.

இதற்கிடையே, துபாய் சர்வதேச விமான நிலையப் பகுதியில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், அது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி இது குறித்துக் கூறுகையில், “ஈரான் போர் நிறுத்தத்தையோ அல்லது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையையோ கோரவில்லை. தேவையிருக்கும் வரை ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளும். ட்ரம்ப் இதனை சட்டவிரோதப் போர் என்று ஒப்புக்கொள்ளும் வரை ஈரான் தனது பதிலடியைத் தொடரும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும், போலி வீடியோக்களையும் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தரவிட்டுள்ளது. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு தலைமை வழக்கறிஞர் டாக்டர் ஹமாத் சைப் அல் ஷம்சி எச்சரித்துள்ளார்.

உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை என ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், அங்கு ‘ஸ்மார்ட் கட்டுப்பாடு’  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் போருக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய எண்ணெய் கப்பல்கள் உட்பட பிற நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் உலக நாடுகளுக்கான எரிசக்தி விநியோகத்தைத் தடுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

பிராந்தியப் பாதுகாப்பு குறித்து சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தொலைபேசி வாயிலாக ஆலோசித்தனர். வளைகுடா நாடுகள் (GCC) மீது ஈரான் நடத்தும் தாக்குதல்கள் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இரு தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது நாடுகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.